புதுடெல்லி: சிபிஐ அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து தனது உறவினர் வீட்டிலேயே சோதனை நடத்தி, லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய பெண்ணை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
சோதனையின்போது அந்த 22 வயது இளம்பெண் முகமூடி அணிந்திருந்ததால், உறவினரால் அந்தப் பெண்ணைத் தனது உறவினர் என்று தெரியவில்லை.
அவர் இஸ்ரத் ஜமீல் என்ற 57 வயதான உறவினரின் வீட்டிலிருந்து, ரூ.3 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருள்களையும் கொள்ளையடித்ததாக ஞாயிற்றுக்கிழமை காவல்துறை தெரிவித்தது.
இளம்பெண்ணுடன் இரு ஆடவர்களுமாக மொத்தம் மூன்று பேர் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதுபோல் பாசாங்கு செய்தனர்.
பாதிக்கப்பட்ட இஸ்ரத் ஜமீல் டெல்லியின் வஜிராபாத் பகுதியில் வசித்து வருகிறார். குற்றத்திற்கு மூளையாகச் செயல்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியிடப்படவில்லை.
எனினும் அவர், வடகிழக்கு டெல்லியின் கரவால் நகரில் வசிப்பதாகவும் தனது சுற்றுப்புறத்தில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு அடிப்படை மருத்துவச் சிகிச்சையையும் குழந்தைகளுக்கு தனியார் கல்விக் கட்டணத்தையும் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
“கடந்த ஜூலை 10ஆம் தேதி இரவு ஏறக்குறைய 7.30 மணியளவில், ஜமீல் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் வீட்டில் இருந்தார். அப்போது, வெள்ளைச் சட்டையும் கறுப்பு கால்சட்டையும் அணிந்த இரண்டு ஆண்களும் முகமூடி அணிந்த ஒரு பெண்ணும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
“ஜமீல் வீட்டிற்குள் நுழைந்து, தங்களை சிபிஐ சிறப்புப் பிரிவின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட மூவரும், அவரைக் கைது செய்ய ஆணை இருப்பதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்த அலமாரியின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றனர்,” என்று இந்த வழக்குடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 18) மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.75 லட்சம் ரொக்கம், திருடப்பட்ட 29 நகைகள் மீட்கப்பட்டதாகக் காவல்துறை மேலும் கூறியது.