கோழிக்கோடு: லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு அனுப்பப்பட்ட அகவிகள் (பேஜர்) வெடித்த சம்பவம் தொடர்பில் கேரள மாநில வயநாட்டைச் சேர்ந்த இளையர் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தற்போது நார்வே குடியுரிமை பெற்ற 39 வயது தொழில்முனைவரான ரின்சன் ஜோஸ் பற்றி வயநாடு மக்களும் தகவலறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர், வயநாட்டில் உள்ள மனந்தவாடியை பூர்வீகமாகக் கொண்டவர். ஓஸ்லோவில் வசித்து வரும் இவர், நோர்டா குளோபல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் வழியாக ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லா போராளிகளை இலக்காகக் கொண்டு பேஜர்கள் வெடிக்கச் செய்யப்பட்டன. இது, இஸ்ரேலின் வேலையாகத்தான் இருக்கும் என்று ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பேஜர்களில் சிறிய அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் பேஜர்களை ஜோசுடன் தொடர்புடைய நோர்டா குளோபல் நிறுவனம் வழங்கியதாக தெரிய வருகிறது. ஜோஸின் நிறுவனம், தைவானிலிருந்து உதிரிபாகங்களை வாங்கி பேஜர்களைத் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் இளைய சகோதரர் வசிக்கும் அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்கு ரின்சன் ஜோஸ் தப்பிச் சென்றிருக்கலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. லெபானில் பேஜர் வெடித்த நாளிலிருந்து அவரது மனைவியையும் காணவில்லை.