தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருமானச் சமத்துவம்: உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா

2 mins read
e007c946-1330-4fed-8fc1-ee345c2fc0c9
கினி குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கினி குறியீட்டின் அடிப்படையில் அனைத்துலகளவில் வருமான சமத்துவத்துக்கான பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அப்பட்டியலில், இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

24.1 மதிப்பெண்களுடன் ஸ்லோவாக் குடியரசு முதலிடத்திலும் 24.3 மதிப்பெண்கள் பெற்று ஸ்லோவேனியா இரண்டாம் இடத்திலும் 24.4 மதிப்பெண்களுடன் பெலாரஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ஒரு நாட்டில் மக்களுக்கு இடையே உள்ள வருமானம், வளம் உள்ளிட்டவை எவ்வளவு சமமாகப் பகிரப்படுகிறது என்பதை அளவிட கினி குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

அதில் மதிப்பெண்கள் 0 முதல் 100 வரை இருக்கும்.

0 என்பது முழுமையான வருமான சமத்துவத்தையும் 100 மதிப்பெண் என்பது முழுமையான வருமான சமத்துவமின்மையும் குறிக்கிறது.

2011-12 ஆண்டுக்கும் 2022-23 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மை கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

இதனால் உலகளவில் நான்காவது வருமான சமத்துவம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

2011க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் 16.2 விழுக்காடாக இருந்த வறுமை விகிதம் 2022க்கும் 2023க்கும் இடையில் 2.3 விழுக்காட்டாகக் குறைந்ததாக உலக வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன.

சமத்துவ அளவீடான கினி குறியீட்டில், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. 

அந்தப் பட்டியலில் சீனா 35.7 மதிப்பெண்களையும் அமெரிக்கா 41.8 மதிப்பெண்களையும் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்