தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி கள்ளப் பணம் சிக்கியது: வருமான வரித்துறை

தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி கள்ளப் பணம் சிக்கியது: வருமான வரித்துறை

2 mins read
579eace4-3e3f-420c-9369-d6cb7483fdda
மார்ச் 16 முதல் மே 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  - கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை ஆறு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், ஏழாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை (ஜுன் 1) நடைபெறுகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முறையான ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாக கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவை குறித்த விவரங்களை வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை (மே 31) வெளியிட்டது.

இந்த மக்களவைத் தேர்தலில்தான் சாதனையளவு ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.

மார்ச் 16 முதல் மே 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிடிபட்டதைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கடந்த மக்களவைத் தேர்தலில் இது ரூ.392 கோடியாக இருந்தது.

டெல்லியிலும் கர்நாடக மாநிலத்திலுமே ஆக அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிக்கத்தக்க ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்டன.

தமிழகம் ரூ.150 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 100 கோடி என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்