ஆக்ரா: மாத ஊதியமாக 15,000 ரூபாய் பெறும் துப்புரவு ஊழியர்க்கு ரூ.340 மில்லியன் (S$5.33 மில்லியன்) வருமானத்திற்கான வரி செலுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் கரண் குமார். இது தமக்குக் கிடைத்த ‘வாழ்நாள் அதிர்ச்சி’ எனக் குறிப்பிட்ட கரண், பின்னர் அது தொடர்பில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அவருக்கு வந்துள்ள கடிதத்தில், கடந்த 201-20ஆம் ஆண்டில் கரண் ரூ.33.86 கோடி வருமானம் ஈட்டினார் என்றும் அதற்கு அவர் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக்ராவிலுள்ள ஒரு வங்கியில் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ஒப்பந்தத் துப்புரவு ஊழியராக மாதம் ரூ.15,000 சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாக கரண் தெரிவித்தார்.
தம்முடைய வருமான வரிக் கணக்கு எண் அட்டை (பான் அட்டை) விவரங்களை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் சந்தேகப்படுகிறார்.
இதுகுறித்துக் கேட்டதற்கு, தங்களது கணினியில் கரணின் ‘பான்’ அட்டை விவரங்களின்கீழ் அதிக வருமானம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று நைன் சிங் எனும் வருமான வரித்துறை அதிகாரி கூறினார்.
‘பான்’ அட்டை விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
சில நாள்களுக்குமுன் உத்தரப் பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த முகம்மது ரகீஸ் என்ற பழச்சாறு வணிகருக்கு ரூ.75 மில்லியன் வருமானத்திற்கு வரி செலுத்தச் சொல்லி கடிதம் கிடைத்தது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
“அன்றாட உணவிற்கே திண்டாடுகிறோம். இவ்வளவு பணமிருந்தால் என் மகன் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?” என்று ரகீசின் தாயார் ஆதங்கப்பட்டார்.

