பங்ளாதேஷ் கருத்தரங்கில் தவறான வரைபடம்: சுட்டிக்காட்டிய இந்திய அரசதந்திரி

பங்ளாதேஷ் கருத்தரங்கில் தவறான வரைபடம்: சுட்டிக்காட்டிய இந்திய அரசதந்திரி

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவியலாப் பகுதி என்று வலியுறுத்தினார்
படங்கள்: என்டிடிவி

11 Jul 2026 - 3:43 pm

1 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஜம்மு காஷ்மீரின் வரைபடம் தவறாகக் காட்டப்பட்டதற்கு இந்தியத் தூதரக அதிகாரி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘ஜம்மு காஷ்மீர்’ யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்கவியலாப் பகுதி என்று டாக்காவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் அதிகாரியாகப் பணிபுரியும் பூஜா குமாரி ஜா வலியுறுத்தினார்.

பங்ளாதேஷ் அனைத்துலக, உத்திபூர்வக் கல்விக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவுக்கான பங்ளாதேஷின் முன்னாள் தூதர் அகமது தாரிக் கரிம் உரையாற்றினார்.

அவரது உரையின்போது திரையிடப்பட வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரைத் தவறாகச் சித்திரித்திருந்ததைத் திருவாட்டி பூஜா குமாரி ஜா சுட்டிக்காட்டினார்.

திரு கரிம் அது சித்திரிப்பு மட்டுமே என்றும் உண்மையான எல்லைகளை அது காட்டவில்லை என்றும் கூறினார்.

அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திருவாட்டி ஜா, “எனக்குப் புரிகிறது ஐயா. இருப்பினும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அது இங்கே தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதைச் சுட்டிக்காட்டுகிறேன்,” என்று கூறியதுடன் ஜம்மு காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவரா என்று திரு கரிம் கேட்டபோது, தாம் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இரண்டாம் செயலாளராகப் பணிபுரிவதாகத் திருவாட்டி ஜா பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்ளாதேஷின் வெளியுறவு அமைச்சர் ஷாமா ஒபயித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்