சென்னை: சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய மைனாக்கள் நிறைய வரத் தொடங்கியுள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
சென்னை வனத்துறை அதிகாரி V A சரவணன் இதுகுறித்து கூறுகையில், “அதிகமான பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் தொடங்கியுள்ளதால் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகளின் சத்தம் அதிகமாக கேட்கின்றன. அதிக அளவில் பலவகையான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.
“புள்ளி மைனா, ஊதா கொக்கு, சின்ன மற்றும் பெரிய நீர்க்கோழி, இந்திய புள்ளி மூக்கு வாத்து, ஊதா மற்றும் சாதாரண நீர்க்கோழி, கொக்கு வகைகள், சாதாரண பருந்து உட்பட பல பறவைகள் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியுள்ளன.
“இதில் இந்திய புள்ளி மைனா மிகவும் முக்கியமான பறவையாக கருதப்படுகிறது.
“இந்திய புள்ளி மைனாக்கள் முதலில் ஆந்திர பிரதேசத்தில்தான் அதிகமாக இருந்தன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அதிக அளவில் தமிழ்நாட்டு சதுப்பு நிலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. சாதாரண மைனாக்களைப் போல் இல்லாமல், இந்த புள்ளி மைனாக்கள் மிகவும் அமைதியாக இருக்கும்.
“இந்திய புள்ளி மைனா இனப்பெருக்கம் செய்யும் காலம் மார்ச் முதல் செப்டம்பர் வரை. இந்த இனப்பெருக்க காலத்தில் புள்ளி மைனாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பறவை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,” என்றும் கூறினார்.