மும்பை: இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
அவர்கள் 2024ஆம் ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்தது 29 விழுக்காடு கூடி, 239,4 டன்னாக அதிகரித்தது. கடந்த 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே ஆக அதிகம்.
ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை ஐந்து விழுக்காடு கூடி, 802.8 டன்னாக உயர்ந்தது. அதற்கு முந்திய ஆண்டில் இது 761 டன்னாக இருந்தது.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும் திருமணம் மற்றும் விழாக்காலங்களில், குறிப்பாக மூன்றாம் காலாண்டில் அதிக நகைகள் வாங்கியதுமே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக சென்ற ஆண்டு நகைகளுக்கான தேவை 2% குறைந்து, 563.4 டன்னாகக் குறைந்தது. அதற்கு முந்திய ஆண்டில் இது 575.8 டன்னாக இருந்தது.
இந்நிலையில், இவ்வாண்டில் இந்தியாவில் தங்கப் பயன்பாடு 700-800 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.392,000 கோடியாக இருந்த தங்கத் தேவைக்கான மதிப்பு அதற்கடுத்த ஆண்டில் 31% கூடி, ரூ.515,390 கோடியாக அதிகரித்தது.
உலகத் தங்க மன்றம் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) வெளியிட்ட ‘2024 உலகத் தங்கத் தேவைப் போக்கு’அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு இந்தியாவில் தங்க இறக்குமதி 4% குறைந்து, 712.1 டன்னாகச் சரிந்தது. 2023ஆம் ஆண்டில் 744 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்திருந்தது.
சென்ற ஆண்டில் தங்க விலை பலமுறை முன்னில்லாத அளவு உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவ்வாண்டும் அப்போக்கு தொடர்கிறது. தலைநகர் டெல்லியில் செவ்வாய்க்கிழமையன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.85,080ஆகப் பதிவானது.

