புதுடெல்லி: இந்தியா முழுவதும் இயங்கிவரும் 32 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டு, மாணவர்கள், பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 17ஆம் தேதி யுஜிசி அந்தப் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யுஜிசி சட்டம் 1956ன் கீழ் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள், உயர்கல்விக்கோ அரசு, தனியார் வேலைவாய்ப்புகளுக்கோ எவ்விதத்திலும் செல்லுபடியாகாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 32ஆக அதிகரித்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 12 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் எட்டு நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் நான்கு நிறுவனங்களும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் தலா இரண்டு போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் ‘சர்வ பாரதிய சிக்ஷா பீடம்’, மகாராஷ்டிராவின் ‘நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யா பீடம்’ ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள் சமூக ஊடகத் தகவல்களை மட்டும் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிதிகளை மீறிச் செயல்படும் அத்தகைய போலி கல்வி நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்து, அவற்றை உடனடியாக மூடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
