புதுடெல்லி: இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளை நோய் காலத்திற்குப் பிறகு 2024- 2025ஆம் கல்வியாண்டில் சாதனையளவை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
200 நாடுகளில் இருந்து 72,218 மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதாக இந்தியக் கல்வியை அனைத்துலகமயமாக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் நடத்தும் ‘Study in India’ (SII) வாயிலில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை 2014-2015ஆம் கல்வியாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்க தொடங்கின. இந்நிலையில் 2019-2020ஆம் காலாண்டியில் கொவிட் -19 கொள்ளை நோய் உலகளவில் பரவத் தொடங்கியது.
இதன் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டன. இந்திய அரசாங்கம் மேற்கொண்ட புதுபிக்கப்பட்ட பல்நோக்கு நடவடிக்கைகளால் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டது.
2011-2012ல், இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 16,410 ஆக இருந்தது. இது 2014-15ல் 34,774 ஆக உயர்ந்தது. தொடர்ந்து அதிகரித்த இந்த எண்ணிக்கை 2016-17ல், 47,575 ஆகவும் 2019-20ல் 49,000 ஆகவும் இருந்தது. இருப்பினும், அரசாங்க ஆதாரங்களின்படி,கொவிட் -19 காலத்திலும் அதற்கு பிறகும் தொற்றுநோய்க்குப் பிறகும் இந்த எண்ணிக்கை 2014-15ஆம் கல்வியாண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.