கொச்சி: வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவோரில் கேரள மாநிலத்தவர் முன்னணியில் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஆண்டுகளில் அந்நிலையை அம்மாநிலம் இழந்தாலும் வியப்பதற்கில்லை.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் கேரள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்குக் காரணம்.
குறிப்பாக, வளைகுடா நாடுகளிலிருந்து கேரள மாநிலத்திற்குத் திரும்பும் திறனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ‘லிங்க்டுஇன் திறனாளர் உள்நோக்கு’ அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து (யுஏஇ) 9,800க்கும் மேற்பட்டோர் கேரளத்திற்குத் திரும்பினர். அதுபோல, சவூதி அரேபியா, பிரிட்டன் (தலா 1,600 பேர்), கத்தார் (1,400 பேர்), அமெரிக்கா (1,200 பேர்) ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமானோர் தாய்மாநிலத்திற்குத் திரும்பினர்.
கேரள மாநில அரசின் ஆலோசனை அமைப்பான கேரள வளர்ச்சி, புத்தாக்க உத்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்த திறன் மாநாட்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் கேரள மாநிலத்திற்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திலிருந்து மட்டும் ஏறக்குறைய 7,700 தொழில்துறை வல்லுநர்கள் கேரளத்திற்குத் திரும்பிவிட்டனர். அதுபோல, தமிழ்நாடு (4,900), மகாராஷ்டிரா (2,400), தெலுங்கானா (1,000), ஹரியானா (800) ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் மீண்டும் சொந்த மாநிலமான கேரளத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்ததற்குத் தொழில்நுட்பம் முக்கியக் காரணம். வெளிநாடுகளிலிருந்து திரும்பியோரில் கட்டடவியல், எந்திரவியல் பொறியாளர்கள் போன்ற மற்ற துறைகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்,” என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
நெருக்கடியான மாநகர, வெளிநாட்டு வேலைகளைக் காட்டிலும் நிலையான வேலைவாய்ப்பு, குடும்பத்திற்கு அருகிலேயே இருக்க முடிவது, மேம்பட்ட வேலை - வாழ்க்கைச் சமநிலை போன்ற காரணங்களால் கேரளத்திற்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவ்வறிக்கை விளக்கியுள்ளது.
அத்துடன், கடந்த ஐந்தாண்டுகளில் கேரளத்தின் தொழில்துறை திறனாளர் வளம் 172 விழுக்காடு உயர்ந்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.