எரிசக்தித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிலக்கரிப் பயன்பாடு அதிகரிப்பு

மாநில அரசுகளுக்கும் பல்வேறு தொழில் துறைகளுக்கும் நிலக்கரி வழங்கும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன

எரிசக்தித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிலக்கரிப் பயன்பாடு அதிகரிப்பு

1 mins read
0c2448b1-ca1c-45f8-bcd6-bb3a7558536d
இந்தியாவில் தற்போது, 21 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இது, சுதந்திரத்துக்கு பின் பதிவாகும் அதிகபட்ச அளவு.  - படம்: ஈடி ஆட்டோ

புதுடெல்லி: ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இந்திய அரசு விரிவான உத்திகளை வகுத்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு எரிபொருள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய, நிலக்கரி அமைச்சுக்கு முக்கிய உத்தரவுகளை இந்திய அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, அரசு மாணவர் விடுதிகளில் சமையல் தேவைகளுக்காக நிலக்கரி வழங்கவும்; எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஹோட்டல்கள், உணவகங்களுக்கு நிலக்கரி விநியோகிக்கவும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட நிலக்கரி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது, 21 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இது, சுதந்திரத்துக்கு பின் பதிவாகும் அதிகபட்ச அளவு.

இந்தக் கையிருப்பு, பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களுக்கு, 12.7 கோடி, தனியார், வணிக ரீதியிலான சுரங்கங்களுக்கு 1.5 கோடி, மின் உற்பத்தி நிலையங்களுக்கு 5.4 கோடி, போக்குவரத்துத் துறைக்கு, 1.4 கோடி டன் என விநியோகத் தொடரின் பல்வேறு நிலைகளில் பிரித்து வைக்கப்பட்டு உள்ளது என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொழில் துறைகளுக்கு கூடுதல் எரிசக்தி தேவைப்பட்டால், பெட்ரோலிய அமைச்சுடன் இணைந்து தடையற்ற எரிசக்தி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், மாநில அரசுகளுக்கும் பல்வேறு தொழில் துறைகளுக்கும் நிலக்கரி வழங்குவதில் தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்த்தி, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்