புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகக் கேரளாவில் 727 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் தேதி 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த நான்கு நாள்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் .
சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனப் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முதியவர்கள், கர்ப்பிணிகள், முன்களப் பணியாளர்களும் முகக்கவசம் அணியுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பரவலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிள்ளைகளுக்குச் சளி, இருமல், தொண்டை வலி போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரைக் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது.
பள்ளியில் குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி கர்நாடகாவில் 234 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறைத் தகவல் வெளியிட்டது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹாங்காங், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

