மும்பை: இந்தியாவில் அவசர பணத் தேவைகளுக்கு மக்கள் அதிகம் நம்பும் தேர்வாகத் தங்கம் சார்ந்த கடன் உருவெடுத்துள்ளது. தங்கத்தை அடகு வைத்தால் அரை மணி நேரத்தில் பணம் கிடைத்துவிடும் என்பதால், நாட்டின் சில்லறைக் கடன் சந்தையில் தங்கக் கடன் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்திய மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. 2024 ஜூலையில் 1.24 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தங்க அடகுக் கடன் மதிப்பு, 2025ல் 2.06 லட்சம் கோடி ரூபாயாகவும், 2026 ஜூலையில் 5.52 லட்சம் கோடி ரூபாயாகவும் பெருமளவில் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளால் தனிமனிதர் கடன் பெறுவது கடினமாகியுள்ள நிலையில், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், ஒரு பவுன் நகைக்கு 60,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் கிடைக்கிறது. குறைந்த வட்டி, குறைந்தபட்ச ஆவணங்கள், ‘கிரெடிட் ஸ்கோர்’ தடைகள் இல்லை என்பதால் பொதுமக்கள் இதை அதிக அளவில் நாடுகின்றனர்.
தேசிய அளவில் வழங்கப்படும் மொத்தத் தங்கக் கடன்களில் 70 விழுக்காட்டைத் தென்னிந்திய மாநிலங்களேப் பெறுகின்றன.
இதில் தமிழ்நாடு 30 விழுக்காடு பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 15.9 விழுக்காட்டுடனும், கர்நாடகா 10.2 விழுக்காட்டுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.தமிழ்நாட்டில் உள்ள சிறுகுறு தொழிலாளர்களும் நடுத்தர மக்களும் அவசரத் தேவைகளுக்கும் வணிக மூலதனத்திற்கும் தங்கத்தை அடகு வைப்பதை முதன்மை நிதிப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நிதி நிறுவனங்களுக்குத் தங்க அடகுக்கடன் மிகவும் பாதுகாப்பானது என்பதால், சிறு நகரங்களிலும் தங்களது கிளைகளை அவை விரிவாக்கம் செய்து கடன்களை எளிமையாக்கியுள்ளன. மருத்துவம், தொழில் மூலதனம் என பல தேவைகளுக்குத் தங்கம் சார்ந்த கடனே முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.
