தெலுங்கானாவில் அதிகரித்த தனியார் நெல் கொள்முதல்; அரிசி விலை உயரும் ஆபத்து

தெலுங்கானாவில் அதிகரித்த தனியார் நெல் கொள்முதல்; அரிசி விலை உயரும் ஆபத்து

தனியார் துறை போட்டி, போதிய விளைச்சலின்மை காரணமாக நியாயவிலைக் கடைகளுக்கான நெல் கொள்முதலைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கத்திற்குச் சிக்கல்
படம்: தெலுங்கானாடுடே

16 Oct 2026 - 4:56 pm

2 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நெல் விவசாயிகளிடமிருந்து தனியார் வணிகர்கள் அதிக கொடுத்து நெல்லைக் கொள்முதல் செய்து வருவதால், வரும் மாதங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டு சில்லறை விற்பனை விலை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ. 2,440 முதல் ரூ. 2,460 என்பதைவிட, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தனியார் வணிகர்கள் குவிண்டாலுக்கு ரூ.4,000 முதல் ரூ.4,600 வரை வழங்குகின்றனர்.

தெலுங்கானா அரசு சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 ஊக்கத்தொகை அறிவித்திருந்தாலும், அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தாமதமாகின்றன. மேலும், தரப் பரிசோதனைக் கெடுபிடிகளும் இல்லாததால் விவசாயிகள் தனியாரிடம் விற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

நிஜாமாபாத், கரீம்நகர், கம்மம், ரங்காரெட்டி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கி நெல் ரகங்கள் போட்டிபோட்டு வாங்கப்படுகின்றன.

குறைந்த மழைப்பொழிவு, ‘எல் நினோ’ தாக்கம் காரணமாக இவ்வாண்டு நெல் உற்பத்தி வழக்கமான அளவில் 50 விழுக்காட்டைக்கூட எட்டாது என அஞ்சப்படுகிறது. மாநிலத்தின் பெரும் பகுதிகளில் வறட்சி நிலவுவதாக முதல்கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த சாகுபடிப் பருவத்திற்குப் பாசன நீர் வழங்கமுடியாது என்பதால் நெல் பயிரிடுவதைத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஹைதராபாத்தில் சன்ன அரிசி கிலோ ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.300 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. சந்தை வரத்து மேலும் குறைந்தால் கிலோ ரூ.100ஐத் தொடும் எனப் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

மறுபுறம், வறட்சி நிவாரண உதவிகள் நிலத்தின் உரிமையாளர்களுக்கே சென்று சேரும் என்பதால், மாநிலத்திலுள்ள ஏறக்குறைய 2.2 மில்லியன் குத்தகை விவசாயிகள் தங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

தனியார் துறை போட்டி, போதிய விளைச்சலின்மை காரணமாக, நியாயவிலைக் கடைகளுக்கான நெல் கொள்முதலைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கத்திற்குச் சிக்கல் நீடிக்கிறது.

குறிப்புச் சொற்கள்