காத்மாண்டு: எல் நினோ பருவநிலை மாற்றத்தால் இமயமலையின் இந்து குஷ் பகுதியில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு ஏற்படும் என அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதனால், நேப்பாளத்தில் குளிர்கால வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
காத்மாண்டுவைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்துலக ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு நிலையம், பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகம், சீன அறிவியல் கழகத்தின் வளிமண்டல இயற்பியல் நிறுவனம் ஆகியவை இணைந்து 2026 குளிர்கால முன்னோக்கு அறிக்கையைத் தயாரித்துள்ளன.
நேப்பாளம், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் ஈரப்பதமான சூழல் நிலவும் என அவ்வறிக்கை கணிக்கிறது.
இமயமலையின் மேற்குப் பகுதியில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு ஏற்படக்கூடும். அதேநேரம், சில பகுதிகளில் நீடித்த வறட்சியால் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கலாம்.
1950ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஆக வலுவான எல் நினோ ஏற்பட 60 விழுக்காடு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், இமயமலை அடிவாரத்தில் அதிக மழையும் உயரமான பகுதிகளில் அதிகப் பனிப்பொழிவும் ஏற்படலாம்.
இதற்கிடையே, நேப்பாளம், பூட்டானில் பனிப்பாறை மாற்றங்களால் அண்மைய பருவமழையில் பேரழிவு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட்டில் நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏறக்குறைய 1,500 பேர் மாண்டனர்; 5,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிவாரணம், மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றிற்கு $6.64 பில்லியன் (4.7 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா, நேப்பாளத்தில் இயல்பைவிட அதிகப் பனிப்பொழிவும், பூட்டான், சீனாவின் கிழக்கு சிஸாங்கில் குறைந்த பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த பனியளவு நீர்ப்பாசனம், நீர்மின் உற்பத்தி, நீரூற்றுகளைப் பாதிக்கும் என்றும் தென்கிழக்கு சிஸாங், மியன்மாரில் காட்டுத்தீ அபாயம் அதிகம் உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நவம்பர் 25 முதல் 27ஆம் தேதி வரை காத்மாண்டு நகரில் நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் அறிக்கையில் வெளியான தகவல்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
