தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு: ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும்

2 mins read
f70d7129-f1ba-406d-a4f1-62e0294431fd
நடப்பாண்டில் எட்டு புதிய ரயில்கள் தென்மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்குச் சேவையாற்றும் விரைவு ரயில்களின் வேகம் ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அது ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 65 விரைவு ரயில் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், 14 பயணிகள் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது.

“அதன்படி, ஒவ்வொரு பயணத்திலும் 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை, அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை நேரத்தைச் சேமிக்க முடியும்.

“குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும் சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது.

“கொல்லம்-தாம்பரம் விரைவு ரயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரயில் (16618) 55 நிமிடம் முன்னதாகச் செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

“தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்டவணை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.

“புதிய பயணிகள் ரயில், ரயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

“நடப்பாண்டில் எட்டு புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 4 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எட்டு ரயில்கள் மாற்று நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

“மொத்தம் 44 விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 102 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது,” என்று தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்