புதுடெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரசாரத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் 15 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்டதைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணி நான்கு ஹெலிகாப்டர்களையும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இரண்டு ஹெலிகாப்டர்களையும் பாஜக 9 ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துகின்றன.
இதனால், பாட்னா விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் போக்குவரத்தும் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தனித்தனி ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நான்கு இருக்கைகள் கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்களில் ஒன்று தனியாகப் பூர்ணியா நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மற்றொன்றை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உட்பட மற்ற தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஹெலிகாப்டரை முன்பதிவு செய்வதற்கு 3 மணி நேரத்துக்குப் பொருள், சேவை வரியுடன் சேர்த்து கட்டணம் கிட்டத்தட்ட ரூ.10 லட்சத்து 6,200 ஆகும்.
முன்பதிவு செய்த ஹெலிகாப்டரைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தாவிட்டாலும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், பீகாரில் வளர்ச்சி அடையாத கிராமங்களில் ஹெலிகாப்டர்களைக் காண கூட்டம் கூடுகிறது.
இந்தக் கூட்டம் அரசியல் தலைவர்களின் பிரசாரம் முடியும் வரை காத்திருக்கிறது. பிரசாரம் முடிந்து கட்சிப் பிரமுகர்கள் திரும்பிச் செல்லும் போதும் ஹெலிகாப்டர் பறப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.

