இந்திய அரசுத் துறைகளில் அதிகரிக்கும் லஞ்சப்புழக்கம்: வங்கிகளுக்கு முதல் இடம்

இந்திய அரசுத் துறைகளில் அதிகரிக்கும் லஞ்சப்புழக்கம்: வங்கிகளுக்கு முதல் இடம்

2 mins read
f495c4f1-eb92-4381-b9fd-330d4592ad35
இந்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பாக கடந்த ஆண்டில் மட்டும் 70,000க்கும் மேற்பட்ட ஊழல், லஞ்சப் புகார்கள் பதிவாகியுள்ளன. - கோப்புப் படம்: மில்லனியம் போஸ்ட்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் அதிக லஞ்சம் பெறும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில், வங்கிகள் முதல் இடத்தில் உள்ளன.

ரயில்வே துறை இரண்டாம் இடத்தைப் பெற்றுவரும் நிலையில், லஞ்சப் புழக்கம் குறித்து இந்திய விழிப்புணர்வு ஆணையம் (விஜிலன்ஸ் ஆணையம் - சிவிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பாகக் கடந்த ஆண்டில் மட்டும் 70,000க்கும் மேற்பட்ட ஊழல், லஞ்சப் புகார்கள் பதிவாகியுள்ளன.

ஆண்டுதோறும் அரசுத் துறைகளில் பதிவாகும் லஞ்சப் புகார்கள், அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு வருகிறது சிவிசி. அதன்படி, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் மொத்தம் 70,584 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அவ்வாறு பெறப்பட்ட புகார்களில், அதிகபட்சமாக வங்கித்துறைக்கு எதிராக 9,933 புகார்கள் குவிந்துள்ளன. அவற்றில் 9,520 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், 52 புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.

ரயில்வே இரண்டாம் இடம்

ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக 9,381 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் 8,754 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள்துறை மீது 6,531 புகார்களும் டெல்லி உள்ளாட்சி அமைப்புகள்மீது 4,834 புகார்களும் நிலக்கரித்துறை மீது 4,118 புகார்களும் வந்துள்ளன.

மேலும் நிதித்துறை (3,107), டெல்லி காவல்துறை (2,633), சாலைப் போக்குவரத்துத்துறை (2,139), காப்பீட்டு நிறுவனங்கள் (1,536), அஞ்சல்துறை (1,003) ஆகிய துறைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் பெறப்பட்ட 70,584 புகார்களில் 64,905 புகார்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 5,679 புகார்களில் ஏறக்குறைய 2,002 புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

பொதுவாக லஞ்சப் புகார்கள் மீது மூன்று மாத காலக்கெடுவுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்துத் தவறிழைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிவிசி உறுதி அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
லஞ்சம்ஊழல்வங்கிரயில்வேபுகார்விழிப்புணர்வுஆணையம்