புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
அதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டை பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று, நாட்டின் பிரதமர் செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.
இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதிகாரிகள் தற்போது ஏற்பாடுகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் செங்கோட்டை வளாகம் பரபரப்பான சூழலுடன் காணப்படுகிறது. செங்கோட்டை வட்டாரம் முழுவதும் தற்போது தற்காலிகத் தடுப்புகள், தற்காலிகக் கட்டமைப்புகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியத் தொல்லியல் துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி, செங்கோட்டை வளாகம் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொடரும்.
சுதந்திர தின விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை வளாகத்தின் சுற்றுப்புறம் முழுவதும் பாதுகாப்பு கணிசமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பல அடுக்குகளிலான தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லி நகரக் காவல்துறையினர் மற்றும் பிற பாதுகாப்பு முகமைகளைச் சேர்ந்த வீரர்கள் முக்கிய நுழைவு வாயில்களில் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கோட்டைக்குச் செல்லும் வாயில்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவிற்கு, அரசாங்க அனுமதி பெற்ற நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

