புதுடெல்லி: இந்தியாவில் 2014 முதல் 2023 வரையிலான பத்து ஆண்டுகளில் 15.3 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக மத்திய போக்குவரத்து அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மொத்த மரண விகிதம் 10,000 கிலோமீட்டருக்கு 250 பேர் என்ற அளவில் உள்ளதை இது காட்டுகிறது.
இந்த விகிதம் அமெரிக்காவில் 57 பேராகவும் சீனாவில் 119 பேராகவும் ஆஸ்திரேலியாவில் 11 பேராகவும் உள்ளது.
சாலை விபத்து மரணங்களைக் குறைக்க இந்தியாவின் மத்திய அரசாங்கம் மீண்டும் மீண்டும் உலகளாவிய கடப்பாடுகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் அத்தகைய மரணங்களைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டபோதிலும் மரண எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
முந்தைய பத்து ஆண்டு காலமான 2004 முதல் 2013 வரை சாலை விபத்துகளில் 12.1 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் கூடுதலாக நிகழ்ந்துள்ளன.
2023 வரையிலான பத்தாண்டு காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கம், சாலைகளின் நீளம், வாகனங்களின் எண்ணிக்கை ஆகியன அதிகரித்ததால் மரணங்களும் அதற்கேற்ப அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறினர்.
அதேநேரம், மரணங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றனர் அவர்கள்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வாகன எண்ணிக்கை இருமடங்கிற்கும் மேல் அதிகரித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 15.9 கோடியாக இருந்த நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 38.3 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல, 2012ஆம் ஆண்டு 48.6 லட்சம் கிலோமீட்டராக இருந்த இந்திய சாலைகளின் நீளம் 2019ஆம் ஆண்டு 63.3 லட்சம் கிலோமீட்டராக அதிகரித்ததாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட ஆக அண்மைய தரவுகள் குறிப்பிட்டன.