இந்தியாவில் 40% பட்டதாரி இளையர்களுக்கு வேலையில்லை

இந்தியாவில் 40% பட்டதாரி இளையர்களுக்கு வேலையில்லை

2 mins read
609bcd2b-c9ba-484f-9332-e87c6da6bfa7
‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ என்ற தலைப்பின்கீழ் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் இதுகுறித்து தெரியவந்ததாக பெங்களூரில் இயங்கி வரும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் கூறியுள்ளது. - கோப்புப்படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: ட்டப்படிப்பை முடித்த இந்திய இளையர்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பின்றி சிரமப்படுவதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ என்ற தலைப்பின்கீழ் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் இதுகுறித்து தெரியவந்ததாக பெங்களூரில் இயங்கி வரும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இந்தியாவில் பொறியியல், மருத்துவம், வணிகம், மேலாண்மை, கணினி எனப் பல்வேறு பட்டப்படிப்களுக்கான கல்லூரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

ஆனால், அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி.

இந்நிலையில், வேலைவாய்ப்பு தொடர்பாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.

அதில், நாட்டில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமாா் 1.1 கோடி போ் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, 15 முதல் 25 வயது வரையிலான இளம் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 விழுக்காடாகவும், 25 முதல் 29 வயது பிரிவினரிடையே 20 விழுக்காடாகவும் உள்ளது.

வேலை வாய்ப்பின்மை என்ற நிலை திடீரென உருவாகிவிடவில்லை. ஆண்டுதோறும் ஏறக்குறைய எத்தனை புதுப் பட்டதாரிகள் உருவாகிறார்கள் என்பது முன்கூட்டியே ஓரளவு தெரிந்துவிடும். ஆனால் அவர்களுக்குரிய புதிய வேலைவாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை என்பதே இந்நிலைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்தியாவில் கடந்த 2004-05 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் இளையர்கள் புதுப் பட்டதாரிகளாக உருவாகி உள்ளனர் என்கிறது மேற்குறிப்பிட்ட ஆய்வு.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலானோர் பட்டப்படிப்பை முடித்திருப்பதாக மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இவர்களில் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்திருப்பதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் இளையர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதும் சோகமான தகவல்.

கடந்த 2017ஆம் ஆண்டில் 58%ஆக இருந்த இந்தப் போக்கு, 2023ல் 72%ஆக உயர்ந்துள்ளது. குடும்ப வருமானத்தைப் பெருக்க இளையர்கள் உயர் கல்வியைத் தவிர்த்துவிட்டு, குறைவான ஊதியத்தில் முறைசாரா பணிகளுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது.

ஊதிய விகிதத்தைப் பொருத்தவரை, கல்வி கற்காதவர்களைவிட பட்டதாரிகளின் தொடக்க கால ஊதியம் இருமடங்கு அதிகமாகவே உள்ளது என்ற போதிலும், அண்மைக் காலமாக பட்டப்படிப்பை முடித்துள்ள இளையர்களுக்கான, குறிப்பாக இளம் ஆண் பட்டதாரிகளுக்கான ஊதிய உயர்வு குறைந்துள்ளதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல், பணியிடங்களில் ஆண்-பெண் இடையிலான ஊதியப் பாகுபாடு (சமமின்மை) கணிசமாகக் குறைந்து வருவது ஒரு நல்ல மாற்றமாகப் பாா்க்கப்படுகிறது.

மொத்தத்தில், கல்வி நிலையத்திலிருந்து பணியிடத்துக்கு உடனே மாறும் நடைமுறை இந்தியாவில் இன்னும் சவாலாகவே உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்