புதுடெல்லி: இந்தியாவின் ஆறாவது பகுதி மின்கடத்தித் (செமிகண்டக்டர்) தொழிற்சாலை உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது.
புதன்கிழமை (மே 14) பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பகுதி மின்கடத்தித் தொழிற்சாலை ரூ.3,706 கோடி செலவில் அமையும் என்றார்.
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஐந்து பகுதி மின்கடத்தித் தொழிற்சாலைகள் அசாம், குஜராத் மாநிலங்களில் அமைவதாகவும் அவற்றுக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“அவற்றுள் ஒரு தொழிற்சாலையில் இந்த ஆண்டில் உற்பத்தி துவங்கும். 6வது தொழிற்சாலையை ஹெச்சிஎல் - ஃபிக்ஸ்கான் (HCL - FIXCONN) இணைந்து அமைக்கின்றன.
“இத்தொழிற்சாலையில் கைப்பேசி, மடிக்கணினி, மோட்டார் வாகனச் சாதனங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான ‘டிஸ்பிளே டிரைவர் சில்லுகள்’ தயாரிக்கப்படும்.
“இந்தத் தொழிற்சாலை 2027ஆம் ஆண்டு செயல்படத் துவங்கும். ஆண்டுக்கு 3.6 கோடிச் சில்லுகள் தயாரிக்கப்படும்,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறினார்.

