புதுடெல்லி: கடந்த 2025ஆம் ஆண்டு விமானங்களில் 889 கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவானதாக இந்தியப் பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
முந்திய 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 692ஆக இருந்தது என்று விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ குறிப்பிட்டது.
இந்த எண்ணிக்கை 2021இல் 514 ஆகவும், 2022இல் 528 ஆகவும், 2023இல் 487 ஆகவும் பதிவானது.
காங்கிரஸ் உறுப்பினர் ஷியாம்குமார் தௌலத் பார்பே எழுப்பிய கேள்விகளுக்கு மக்களவையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அளித்த எழுத்துவழி பதில்மூலம் பொது விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் இத்தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
விமானங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை உறுதிசெய்ய பொது விமானப் போக்குவரத்து ஒழுங்குவிதிகள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் பிற ஒழுங்குமுறை உத்தரவுகளை டிஜிசிஏ வகுத்துள்ளதாகத் திரு மோஹோல் விளக்கினார்.
அவற்றில், ஒழுங்குமுறைத் தணிக்கைகள், இரவு நேரக் கண்காணிப்பு, சோதனைகள், சிறப்புத் தணிக்கைகள் ஆகியனவும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டு விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, முழுச் சீரமைப்பு சார்ந்த பாதுகாப்பு விதிகளை மீறியது தொடர்பான 42 சம்பவங்களில் விமான நிறுவனங்கள்மீது டிஜிசிஏ நடவடிக்கை எடுத்தது.
இந்த எண்ணிக்கை 2024இல் 31 ஆகவும் 2023இல் 24 ஆகவும் பதிவானது.


