புதுடெல்லி: ஆதார் அட்டைப் பயனர்கள் மட்டுமே வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ரயிலில் தட்கல் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) அமைச்சு ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தட்கல் திட்டத்தின் பலன் இறுதிப் பயனாளர்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
“2025 ஜூலை 1ஆம் தேதியிலிருந்து, ஆதார் அட்டை வைத்திருப்போர் மட்டுமே ஐஆர்சிடிசி இணையத்தளம் அல்லது செயலி வழியாக தட்கல் பயணச்சீட்டை வாங்க முடியும்,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜூலை 15ஆம் தேதியிலிருந்து ஆதாரை அடிப்படையாக ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல்லும் (ஓடிபி) தட்கல் முன்பதிவிற்குக் கட்டாயமாக்கப்படவுள்ளது.
பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் அந்த ஓடிபி எண் பயனர்களின் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.
மேலும், அங்கீகாரம் பெற்ற பயணச்சீட்டு முகவர்கள் தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்குப் பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குளிரூட்டி வசதி உள்ள பெட்டிகளுக்குக் காலை 10 மணிமுதல் 10.30 மணிவரையிலும் குளிரூட்டி வசதியில்லாப் பெட்டிகளுக்குக் காலை 11 மணிமுதல் 11.30 மணிவரையிலும் அவர்களால் முன்பதிவு செய்ய முடியாது.