‘இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு’

‘இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு’

2 mins read
dbf116d6-20c5-4a5a-9af1-94e9722caf5c
297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். - படம்: பிரதமர் மோடி எக்ஸ் தளம்

வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை ஒப்படைத்ததற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

“297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஒப்படைப்பதாகச் சொல்லப்படும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4,000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 - கி.பி. 1900 இடையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை.

இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் 4வது உச்சநிலை மாநாடு, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா. ஆஸ்தி ரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய-பசிபிக் வட்டாரத்தின் அமைதி, வளா்ச்சி, நிலைத்தன்மை, உக்ரேன் மற்றும் காஸா போர் பிரச்சினைக்கு அமைதித் தீா்வைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

“ஜனநாயக அடிப்படையில் குவாட் உறுப்பு நாடுகள் செயல்படுவதில் மகிழ்ச்சி. இந்தோ - பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் குவாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக குவாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு குவாட் மாநாட்டை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய திரு மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என்றார்.

திரு ஜோ பைடன், இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது புதிய விவகாரத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுவதைக் கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.

குவாட் மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி நியூயார்க்குக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோடி, நியூயார்க்கில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் ஐ.நா.வின் எதிர்காலத்து உச்சநிலை மாநாட்டில் திரு மோடி உரையாற்றுகிறார்.

குறிப்புச் சொற்கள்