புதுடெல்லி: இந்திய குடிமக்களுக்கு இனி நுண்சில்லு பதிக்கப்பட்ட மின்கடப்பிதழ்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இத்திட்டத்தின்கீழ், உள்நாட்டில் 80 லட்சம் மின்கடப்பிதழ்களும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக 60,000 மின்கடப்பிதழ்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
‘அனைவருக்கும் மின்கடப்பிதழ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. இது தொடர்பான பணிகளை வெளியுறவு அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மின்கடப்பிதழ் திட்டத்தை பல கட்டங்களாகச் செயல்படுத்தி வரும் இந்திய அரசு, இதற்காக ‘கடப்பிதழ் சேவை - 2.0’ எனும் திட்டத்தைக் கடந்த மே மாதம் துவங்கியது. சென்னை உட்பட 12 நகரங்களில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது.
பல்வேறு நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பாட்டில் உள்ளது. எனவே, குறைபாடுகள் இல்லாத கடப்பிதழ் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடிநுழைவு மையங்களில் மின்கடப்பிதழ்களைக் கடனட்டைகளைப் போல் பயன்படுத்தலாம். மேலும் கடப்பிதழில் உரிமையாளரின் கைரேகை, முகம் உள்ளிட்ட ‘பயோமெட்ரிக்’ தகவல்கள் ரகசிய குறியீட்டுடன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
இதனால் ஆவணச் சரிபார்ப்பு மிக வேகமாக முடியும். வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும்.
எனவே, இனி இந்தியக் கடப்பிதழ்கள் காகிதம் மற்றும் மின்னணு என ஒருங்கிணைந்த கடப்பிதழ்களாக இருக்கும். இதில், ‘ஆர்எஃப்ஐடி’ எனப்படும் ரேடியோ அலை அடையாள சில்லு, ‘ஆண்டெனா’ ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“கடப்பிதழ்களின் முகப்பில், அதன்கீழ்ப் பகுதியில் தங்க நிற குறியீடு காணப்படும். உட்புற அட்டையின் வடிவமைப்பையும் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல் எளிதில் அச்சிட முடியாதது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் கள்ளச்சந்தையில் போலிக் கடப்பிதழ்களின் புழக்கம் அறவே கட்டுப்படுத்தப்படும்.
“தற்போது பழைய கடப்பிதழைப் பயன்படுத்துவோர், அதன் பயன்படுத்தும் காலம் காலாவதியான பிறகு மின்கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கலாம்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 2035க்குள் நாட்டிலுள்ள அனைத்துக் கடப்பிதழ்களையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

