புதுடெல்லி: வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் மீது கரியமில உமிழ்வுக்கான பழியைத் தேவையின்றிச் சுமத்தும் போக்கு உலக அளவில் நீடித்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ‘ஜி20’ நாடு இந்தியா மட்டுமே என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் புதுடெல்லியில் ‘சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் அனைத்துலக மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இரண்டு நாள்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் தெளிவான பார்வையை முன்வைத்தார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வளரும் நாடுகளே முக்கியக் காரணம் என்பது போன்ற தவறான பிம்பம் உலக அளவில் கட்டமைக்கப்படுவதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவின் கரியமில உமிழ்வு உலகளாவிய சராசரியைவிட மிகக் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நிலையான வளர்ச்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்தியா படைத்துள்ள சாதனைகள் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்வதாகத் திரு மோடி சுட்டிக்காட்டினார்.
மேலும், அணுசக்தித் துறையில் உள்ள தடைகளை அகற்றி, தூய்மையான ஆற்றலைப் பெருமளவில் உற்பத்தி செய்ய இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சூரிய, காற்றாலை, நீர்மின் திட்டங்களின்மூலம் நாட்டின் பசுமை ஆற்றல் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஏறக்குறைய 17 நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் விதிகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, உலக நாடுகளிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.
