ஓவல் டெஸ்ட் போட்டியில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

2 mins read
82b4ae9c-5f04-4903-b7f4-f368808fd6c9
வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், இறுதி விக்கெட்டைக் கைப்பற்றியதை அடுத்து, ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. - படம்: ஊடகம்

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது.

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதி நாள் ஆட்டம், ஓவல் விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த டெஸ்ட் போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இறுதி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது.

முதலில் ஆடிய இந்தியா, 224 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணி 247 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 2வது இன்னிங்சில், இந்தியா 396 ஓட்டங்கள் குவித்தது.

374 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4ஆம் நாள் ஆட்டத்தில் 339 ஓட்டங்களைக் குவித்தது.

இதையடுத்து, ஐந்தாம் நாள் 35 ஓட்டங்கள் எடுத்தால், தொடரைக் கைப்பற்றலாம் என்ற கனவுடன் களமிறங்கிய இங்கிலாந்து பந்தடிப்பாளர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் தரமான பந்து வீச்சால் திணறடித்தனர்.

அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரு அணிகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இங்கிலாந்து வசமாகும் என்ற நிலையில், இந்தியாவுக்கு வெற்றி பெற ஒரே ஓர் விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், அதைக் கைப்பற்றியதை அடுத்து, ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்