செலவு அதிகரிப்பால் சேவைகளை நிறுத்த நேரிடும் என இந்திய விமான நிறுவனங்கள் எச்சரிக்கை

வரிகளைக் குறைக்க அரசாங்கத்துக்கு கோரிக்கை

செலவு அதிகரிப்பால் சேவைகளை நிறுத்த நேரிடும் என இந்திய விமான நிறுவனங்கள் எச்சரிக்கை

2 mins read
dcf80b47-b2d6-44b0-9229-6899b33dcae5
உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் பயன்பாட்டாளரான இந்தியா, ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணை மூடல் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: எரிபொருள் விலை உயர்வை அரசாங்கம் குறைக்கத் தவறினால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்த நேரிடும் என்று இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

“இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கடும் அழுத்தத்தில் உள்ளது. சேவைகளை நிறுத்துவது அல்லது நிரந்தரமாக மூடும் நிலைக்கு விமானச் சேவை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன,” என்று இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, பொது விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தைப்போல விமான எரிபொருள் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வரிகளைக் குறைக்க அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விலைகள் உயரும், ராகுல்

புதன்கிழமை (ஏப்ரல் 29) மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு, இந்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

“ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், பணவீக்கத்தின் தாக்கம் அதிகரிக்க உள்ளது. ஏப்ரல் 29க்குப் பிறகு பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயர்ந்துவிடும்,” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“தேர்தல் கால நிம்மதி முடிந்தது, விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது,” என்று அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணை மூடல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது இந்தியாவின் எரிபொருள் சூழலைப் பாதித்துள்ளது.

விலை உயர்வால் சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து

ஒரு விமான நிறுவனத்தின் மொத்தச் செலவில் 40 விழுக்காடு எரிபொருளுக்கே செலவிடப்படுவதால், விலை உயர்வு லாபத்தைப் பாதிப்பதோடு பயணச்சீட்டுக் கட்டணத்தையும் உயர்த்தும். இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், இறக்குமதி வரி, உள்ளூர் வரி காரணமாக துபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களைவிட இந்தியாவில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது.

அரசாங்கம் விமான எரிபொருள் விலை உயர்வுக்கு 25 விழுக்காடு உச்சவரம்பு, தரையிறங்கும் கட்டணக் குறைப்பு போன்ற தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவிமானப் போக்குவரத்துகட்டணம்அதிகரிப்புஎண்ணெய்ஏர் இந்தியாஇண்டிகோ