தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கும் இண்டியா கூட்டணி

2 mins read
af693f7c-9f3c-4067-8fed-a0368299cb6c
மல்லிகார்ஜூன கார்கே. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய துணை அதிபர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பாகப் பொது வேட்பாளரைக் களமிறக்க முடிவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, அக்கூட்டணியில் உள்ள கட்சியினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய துணை அதிபர் ஜெகதீப் தன்கர் அண்மையில் உடல்நலப் பிரச்சினையால் பதவி விலகினார்.

இதையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி புதிய துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தலில் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சிகள் சார்பில் யார் யார் போட்டியிட உள்ளனர் என்று இன்னும் தெரியவில்லை. வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 25ஆம் தேதி முடிவடையும். ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி, தனது வேட்பாளரை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள் விலகிவிட்டன. சில கட்சிகள் பிரச்சினைக்குரிய விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதில்லை. எனவே, இதுபோன்ற பின்னடைவுகள் இல்லாமல் ஒருமித்த கருத்துடன் துணை அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்ய கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் விரும்புகிறது.

இதையடுத்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடர்புகொண்டு பேசி வருவதாகவும் விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்ட பிறகே, இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் முடிவு செய்​யப்​படு​வார் என்றும் கூறப்படுகிறது.

துணை அதிபர் தேர்தலில் 782 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். எனவே, 391 எம்பிகளின் ஆதரவைப் பெற்றால்தான் வெற்றிபெற முடியும். தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 எம்பிக்​கள், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​பிக்​களின் பலம் உள்​ளது.

ஒருவேளை எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளர் களமிறங்கும் பட்சத்தில் தேர்தலில் கடும் போட்டி நிலவக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்