புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆர்) நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், முடிவு எடுக்கும் நடைமுறைகள் குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இரண்டு தேர்தல் ஆணையர்கள் (சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி), தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் ஜெனரல் ஆகியோர் தனித்தனி பிரமாணப் பத்திரங்கள் மூலம் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மனுவில் பல்வேறு முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள யார் முடிவு எடுத்தது? இந்த முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதா அல்லது தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியதா? என்று இண்டியா கூட்டணி கேட்டுள்ளது.
மேலும், எஸ்ஐஆர், படிவம்-6 (Form 6) விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எத்தனை முறை தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர்? ஜூலை 28, 2026 தேதியிட்ட அலுவலக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தது யார்? ஆகிய கேள்விகளும் அம்மனுவில் இடம்பெற்றுள்ளன.
இணையத்தில் உள்ள படிவம்-6ல் கூடுதல் உறுதிமொழியைச் சேர்க்க அனுமதி அளித்தது யார்? அதனைச் சமர்ப்பிக்காததால் எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன? என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், வரைவு-இறுதி வாக்காளர் பட்டியல்களில் மாநில வாரியாகவும், பாலின வாரியாகவும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் வாயிலாக ஆணையர்களின் ஒப்புதல்கள் பெறப்பட்டனவா? மேற்கு வங்கத்தில் வாக்காளர் சேர்ப்பு உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுத்த அதிகாரிகள் யார்? என்பன உள்ளிட்ட கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையர்கள் இடையே எழுத்துபூர்வ ஆட்சேபனைகள் எழுந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
