புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாடு முழுவதிலுமிருந்து வந்த விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 13ஆம் தேதி சந்தித்திப் பேசினார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சந்திப்பின்போது, விவசாய சங்கத் தலைவர்கள் அந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் மேலும் சோளம், சோயாபீன், பருத்தி, பழங்கள் ஆகியவற்றைப் பயிரிடும் விவசாயிகளுக்கு அதன் மூலம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் குறித்த கவலைகளை அவர்கள் முன்வைத்ததாகவும் காங்கிரஸ் தரப்பு தெரிவிக்கிறது.
அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கும் கிராமப்புற வருமானத்தைப் பாதுகாப்பதற்கும் நாடு தழுவிய அளவில் மக்களை ஒன்று திரட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்தது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் வரவு செலவுக் கூட்டத்தொடரில், ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்துக் காரசாரமான கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு: சாடும் பாஜக
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பருத்தி விவசாயிகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அவரின் அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய விவசாயிகளை அவர் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என சாடினார்.
மேலும், நாட்டின் பொருளியல் கொள்கைக்கு எதிராக மக்களை அவர் தூண்டிவிடுகிறார் என்றார் திரு பியூஸ்.
தொடர்புடைய செய்திகள்
“வழக்கம்போல் ராகுல் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தவறானத் தகவல்களைப் பரப்புகிறார். அமெரிக்காவுடன் இந்தியா மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. விவசாயிகள் நலனையும் தொழில்துறை வளர்ச்சியையும் அந்த ஒப்பந்தம் உறுதிசெய்யும்,” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.

