இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்: அமித்ஷா

இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்: அமித்ஷா

2 mins read
0c4ebcb5-148a-4b34-8377-1427c8bb3c57
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. - படம்: இந்திய உள்துறை அமைச்சு

புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“இந்த வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்காகப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரு நாட்டு மக்களுக்கும் இது நன்மை தரும். இந்திய அமெரிக்க வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்” என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

வரி குறைப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கருத்து தெரிவித்தார்.

“இந்த ஒப்பந்தம் நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதனுடன், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும். இந்தியாவின் முதன்மையான ‘மேக் இன் இந்தியா’ திட்டப் பணியை வலுப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

அதிபர் டிரம்ப்பின் வரி குறைப்பு அறிவிப்புக்குத் தன்னுடைய பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

அமெரிக்கா எடுத்துள்ள முடிவைக் குறித்து இந்தியாவின் வர்த்தக, தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார்.

“இந்தக் குறிப்பிடத்தக்க வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய, அமெரிக்க மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

“பகிரப்பட்ட வளங்களுக்காக இணைந்து பணியாற்றும் இரண்டு ஒத்த மனமுடைய, சிறந்த முறையில் வர்த்தகம் செய்யும் ஜனநாயக நாடுகளின் ஆற்றலை இது பிரதிபலிக்கிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் திறன்படைத்த தொழிலாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை இது உருவாக்கும்.

“அமெரிக்காவிடமிருந்து இந்தியா தொழில்நுட்ப வசதிகளைப் பெற உதவும். இது, ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்றில்லாமல், இரு நாட்டு உறவுகளை மறுவடிவமைப்பு செய்யும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை ஆகும். 2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான நம்முடைய பயணம் இதனால் விரைவுப்படுத்தப்படும்,” என்று அமைச்சர் கோயல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்