கௌகாத்தி: இந்தியாவும் பங்ளாதேஷும் உள்ளே நுழைய அனுமதிக்காத நிலையில் எல்லையில் ஒன்பது பேர் தவித்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
அசாம் மாநிலத்தின் தெற்கு சல்மாரா-மன்கச்சார் மாவட்ட எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அவர்கள் பங்ளாதேஷ் குடிமக்கள் என்று தெரியவந்தபோதிலும், அதனை ஏற்க மறுத்த பங்ளாதேஷ் எல்லைக் காவல் படையினர் (பிஜிபி) அவர்களைத் தங்களது சொந்த நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
குடியுரிமை இன்னும் உறுதிப்படுத்தப்படாததால் அந்த ஒன்பது பேரால் இரு நாடுகளுக்குள்ளும் நுழைய முடியவில்லை.
அந்தப் பிரச்சினைக்கு முடிவுகாண இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கொடி அமர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆயினும், அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளின் எல்லைப் பகுதியான மன்கச்சார் என்னும் பகுதியில் அந்த ஒன்பது பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க நேர்ந்தது. அந்தச் செய்தி வெளியானது முதல் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
அவர்களை நாடற்றவர்களாக இருநாட்டுப் படையினரும் நடத்துவதாகக் கூறப்பட்டது.
தாங்கள் பங்ளாதேஷ் குடிமக்கள் என்றும் வேலைக்காக இந்தியாவுக்கு வந்திருந்ததாகவும் காணொளிப் பதிவு ஒன்றில் அந்த ஒன்பது பேரும் கூறியுள்ளனர். தங்களது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் அவர்கள் கண்ணீர்விட்டு அழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

