புதுடெல்லி: புதுடெல்லியிலிருந்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு 11.59 மணிக்குள் வெளியேறும்படி கனடிய அரசதந்திரிகள் ஆறு பேருக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டது.
கனடாவுக்கான இந்தியத் தூதரையும் அரசதந்திரிகளையும் சென்ற ஆண்டு சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிப்பதாகக் கனடா அறிவித்ததை அடுத்து இந்தியா இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்குப் பதிலடி தரும் வகையில் கனடாவும் அந்நாட்டிலுள்ள இந்திய அரசதந்திரிகள் ஆறு பேரை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இந்திய அரசாங்கத்தின் வன்முறைப் பிரசார நடவடிக்கைகளில் பங்காற்றியது தொடர்பான ஆதாரங்களைக் கனடியக் காவல்துறை சேகரித்த பிறகு அவர்கள் வெளியேற வேண்டுமென அது உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவுக்கான கனடாவின் தற்காலிகத் தூதர் ஸ்டீவர்ட் வீலரை நேரில் அழைத்து, இந்தியத் தூதர் மீதும் அரசதந்திரிகள் மீதும் கனடா ஆதாரமின்றி நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று புதுடெல்லி கூறியது.
கனடாவிலிருந்து தனது அரசதந்திரிகளை மீட்டுக்கொள்வதாகத் தெரிவித்த இந்தியா, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தற்போதைய கனடிய அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக நம்ப இயலாது என்றும் கூறியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் தீவிரமடைந்திருப்பதை அண்மைய நடவடிக்கைகள் காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.