புதுடெல்லி: இந்தியாவும் இந்தோனீசியாவும் இருதரப்பு உத்திபூர்வ உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உத்திபூர்வப் பங்காளித்துவம் குறித்தும் இருதரப்பு தற்காப்பு சார்ந்த ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தியா சார்பாக தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்தோனீசியா சார்பாக தற்காப்பு அமைச்சர் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோதீனும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அனைத்துலகச் சட்டத்தின் வழிகாட்டுதல், அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும் மதிப்பளிப்பளித்தன் மூலம் சுதந்திரமான, அமைதியான, நிலையான, வளமான இந்தோ-பசிபிக் பகுதியைப் பராமரிக்க வேண்டும் என இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
கடல்சார் கள விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு, கூட்டு செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியாவும் இந்தோனீசியாவும் உறுதிபூண்டுள்ளன.
மேலும், தொழில்நுட்பப் பரிமாற்றம், ஆய்வு, மேம்பாடு, விநியோகத் தொடர் இணைப்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டுப் பாதுகாப்பு, தொழில் ஒத்துழைப்புக் குழுவை நிறுவுவதற்கான இந்தியாவின் முன்மொழிவை இந்தோனீசியா பாராட்டியது.
பாலஸ்தீனத்தில் ஒரு நியாயமான, நீடித்த அமைதிக்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.

