புதுடெல்லி: அடுத்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்யப்படும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியாவின் ‘சந்திரயான்’ திட்டத்தில் ஜப்பானும் இணைகிறது.
இந்தியப் பிரதமர் மோடி தமது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனாவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பு, அரிய வகை கனிமங்கள், தற்காப்பு, தொழில்நுட்ப மேம்பாடு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானும் இந்தியாவும் விரிவான தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளதாக அவர் கூறினார்.
தோக்கியோவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா, ஜப்பான் வா்த்தக மாநாடு நடைபெற்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே, பல்வேறு துறைசாா்ந்த 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவற்றுள் கூட்டு விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது தொடா்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் (ஜக்ஸா) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் ‘சந்திரயான் 5’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வா்த்தக மாநாட்டில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், பொருளியல் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தொலைநோக்குத் திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் உருவாக்கியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பரவலாக ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சுதந்திரமான, அனைவருக்குமான, அமைதியான, சட்டத்தின் அடிப்படையிலான இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தை உருவாக்க இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன என்றும் வலுவான ஜனநாயக நாடுகளான இந்தியாவும் ஜப்பானும், சிறந்த உலகைக் கட்டமைப்பதில் இயற்கையான கூட்டாளிகள் என்றும் பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார்.
சந்திரயான் தொடரின் அடுத்த பதிப்பு அல்லது சந்திர துருவ ஆய்வுப் பணியில் (லூபெக்ஸ்) இந்தியாவும் ஜப்பானும் கைகோப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவு தொழில்கள், தொடக்க நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பையும் கலாசாரத்தையும் வளர்க்கிறது என்றார்.
“இருநாடுகளும் விண்வெளித் துறையில் இணைந்து செயலாற்றுவதன் மூலம், நமது பங்காளித்துவத்துக்கும் அப்பாற்பட்ட எல்லைகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கையையும் மேம்படுத்தும்.
“விண்வெளி அறிவியலின் உறுதியான தாக்கங்கள், முன்னேற்றங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன,” என்றார் பிரதமர் மோடி.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “இந்தியா-ஜப்பான் நட்பின் முக்கிய தூணாக மாநில-மாகாண ஒத்துழைப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இருதரப்பும் பல துறைகளில் இணைந்து செயல்பட மகத்தான வாய்ப்புகள் உள்ளன என்றும் இத்தகைய ஒத்துழைப்பானது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜப்பானிய பிரதமருடன் புல்லட் ரயில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களைச் சந்தித்தார். அந்நாட்டுப் பிரதமர் ஷிகெரு இஷிபா, பிரதமர் மோடியுடனான பயணத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பின்னர் பகிர்ந்தார்.
இதனிடையே, சீனா செல்லும் அவர் அந்நாட்டு அதிபா் ஸி ஜின்பிங்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
முன்னதாக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நிலையற்றுப் போயிருக்கும் உலகப் பொருளியல் சூழலில் நிலைத்தன்மையைக் கொண்டு வர மிகப் பெரிய நாடுகளான சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது முக்கியம் என திரு மோடி வலியுறுத்தினார்.