காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன

2 mins read
ffd22923-6a66-476b-b7bc-72c80390d280
ஏப்ரல் 22 கா‌ஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று மற்றதன் குடிமக்களை நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று உத்தரவிட்டன. - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில், காஷ்மீரில் உள்ள முக்கியமான 48 சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் தொடர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மூடப்படும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு, காஷ்மீரில் உள்ள தூஷ்பத்ரி, கோகேர்நாக், துக்சும், சின்தான் டாப், அக்சாபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப், தோஸ்மைதானம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் இடங்களாகும்.

ஆனால், இவை அனைத்துமே மூடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், தங்குவிடுதிகளில் செய்யப்பட்டிருந்த 12 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் ரத்தாகிவிட்டன.

அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமலேயே பல இடங்கள் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாகச் சர்ச்சைக்குரிய கா‌ஷ்மீர் பகுதியில் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக டெல்லி ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் கா‌ஷ்மீரில் சுற்றுப்பயணிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இருநாட்டுக்கும் இடையிலான உறவில் விரிசல் கூடியது.

இந்திய ராணுவம், இருநாட்டு வீரர்களும் கா‌ஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை உறுதிசெய்தது. ஆனால், பாகிஸ்தான் அதை உறுதிப்படுத்தவில்லை.

ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவுடன் சுற்றுப்பயணிகள் தாக்கப்பட்டதாக இந்தியா குறைகூறியது. தாக்குதலில் 26 ஆடவர்கள் கொல்லப்பட்டனர்.

அதைப் பாகிஸ்தான் மறுத்ததைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் கா‌ஷ்மீரில் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு ஒன்று மற்றதன் குடியிருப்பாளர்களை நாட்டைவிட்டு விரட்டி எல்லைகளை மூடியது.

ஏப்ரல் 28க்கும் 29க்கும் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ராணுவம் சிறுசிறு துப்பாக்கிச்சூடுகளை நடத்தியதாக இந்தியா சொன்னது. இந்திய ராணுவம் அந்தத் தூண்டுதலைக் கட்டுப்படுத்தப்பட்ட வகையில் கையாண்டதாகவும் உயிருடற்சேதம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டது.

பாகிஸ்தான் குடிமக்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்று இந்தியா சொன்னது. அது ராணுவ நடவடிக்கையாக மாறக்கூடும் என்று கவனிப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

1947ஆம் ஆண்டு பிரிட்டி‌ஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட முஸ்லிம் அதிகம் உள்ள கா‌ஷ்மீர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிளவுபட்டிருக்கிறது. இருநாடுகளும் கா‌ஷ்மீர்மீது உரிமை பாராட்டுகின்றன.

சுதந்திரம் தரும்படி அல்லது பாகிஸ்தானுடன் இணையும்படி இந்தியக் கட்டுப்பாட்டின்கீழ் வரும் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் 1989ஆம் ஆண்டிலிருந்து போராடிவருகின்றனர்.

இந்தியக் காவல்துறை அதிகாரிகள் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட ல‌ஷ்கர்- இ- தொய்பாவின் கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் என்று கூறப்படும் இரண்டு பாகிஸ்தான் ஆடவரையும் ஓர் இந்திய ஆடவரையும் தேடிவருகின்றனர்.

அவர்களைக் கைதுசெய்வதற்கு உதவியாகத் தகவல் கொடுப்போருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்