இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் ஒன்றை ஒன்று சாடியுள்ளன.
இருதரப்புக்கும் இடையே சண்டைநிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக சனிக்கிழமை (மே 10) இரவு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமக்குச் சொந்தமாக ட்ரூத் சோஷியல் தளத்தில் அறிவித்தார். அமெரிக்கா, சமரசப் பேச்சை நடத்தியதாக திரு டிரம்ப் கூறியிருந்தார்.
பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் சண்டைநிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதிப்படுத்தின. எனினும், சண்டைநிறுத்த ஒப்பந்தம் இந்தியா, பாகிஸ்தானின் முடிவே என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சண்டைநிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட சில மணிநேரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அதனை மீறியதாக மீறியதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சு செயலாளர் குற்றஞ்சாட்டினார். அதேவேளை, தாங்கள் சண்டைநிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்துகொள்வதாகவும் அதை மீறும் இந்தியாவுக்கு எதிராகத்தான் தாங்கள் பதில் நடவடிக்கை எடுப்பதாகவும் பாகிஸ்தான் சொன்னது.
முன்னதாக, சண்டைநிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட சில மணிநேரத்துக்குப் பிறகு இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் பலமுறை பெரிய அளவில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்குள்ள ஏஎஃப்பி செய்தி நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆயினும், இரவு நேரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட சண்டையும் வெடிப்புகளும் எல்லையின் இருபுறமும் அதிகாலையில் ஓய்ந்ததாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி தெரிவித்தது.
இந்தியாவின் எல்லையோர நகரங்களில் முந்திய நாள் இரவு ஒட்டுமொத்தமாக மின்சாரம் தடைபட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு மின்விநியோகம் திரும்பியது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியின் பஹல்காம் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 26 சுற்றுப்பயணிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தான் காரணம் என்று டெல்லி குற்றஞ்சாட்டியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இம்மாதம் ஏழாம் தேதி சண்டை மூண்டது.
இருதரப்பும் ஈடுபட்டுவந்த சண்டை முழுப் போராக உருவெடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவியது. அதனையடுத்து சனிக்கிழமை சண்டைநிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதனிடையே, சண்டைநிறுத்தத்திற்காக இருநாட்டுத் தலைவர்களையும் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
“இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றபோதும், இரு நாடுகளுடனும் வணிகத்தை அதிகரிக்கப் போகிறேன். அத்துடன், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பிலும் இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.