கெய்ரோ: அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கட்கிழமை (அக்டோபர் 13) அனைத்துலக அமைதி மாநாடு நடந்தது.
அதில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி ஆகிய இருவரின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்டியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், “இந்தியா ஒரு சிறந்த நாடு. அங்கு எனது நண்பர் பிரதமராக உள்ளார். அவர் அற்புதமான பல வேலைகளைச் செய்து வருகிறார்,” என்றார் அவர்.
பாகிஸ்தான் நாட்டினரும் இந்தியர்களும் மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ்வர் என்று நான் நினைக்கிறேன் என டிரம்ப் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் டிரம்ப்புக்குப் பின்னால் நின்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை நோக்கிச் சைகை காட்டிய டிரம்ப், “அவர் அதைச் செய்யப் போகிறார்,” எனச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியா, பாகிஸ்தான் மோதலில் டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால், நான்கு நாள்களில் அப்போர் முடிந்திருக்காது. மிகப் பெரிய மோதலாக அது வெடித்திருக்கும்,” என மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்தியா சார்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீா்த்தி வா்தன் சிங் பங்கேற்றார்.