தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரியால் கைகோக்கும் இந்தியா, ர‌ஷ்யா: நேட்டோ தலைவர்

2 mins read
88e695d1-fd01-4f12-941b-146041285ce3
(இடது) ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசியதாக நேட்டோ தலைவர் கூறினார். - ராய்ட்டர்ஸ்

இந்தியாமீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிகள் ர‌ஷ்யாமீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நேட்டோ கூட்டணி தலைமைச் செயலாளர் மார்க் ரூட் கூறியுள்ளார். ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா இந்தியாமீது வரி விதித்தது.

இந்தியா வரிச் சுமையை எதிர்கொள்வதால் உக்ரேன் தொடர்பான உத்தியை விவரிக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் கேட்டதாக திரு ரூட் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வரி ர‌ஷ்யாவில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற திரு ரூட், ர‌ஷ்ய அதிபர் புட்டினைத் திரு மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு 50 விழுக்காட்டு வரியை எதிர்கொள்வதால் ர‌ஷ்யாவை ஆதரிப்பதாகக் கூறி உக்ரேன் தொடர்பான உத்தியைக் கேட்டறியக்கூடும் என்றார்.

எனினும் திரு ரூட்டின் கருத்துக்கு இந்தியாவும் ர‌ஷ்யாவும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

இந்தியாமீது திரு டிரம்ப் ஏற்கெனவே 25 விழுக்காட்டு வரியை விதித்திருந்தார். ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 விழுக்காட்டு வரியைத் திரு டிரம்ப் கடந்த மாதம் இந்திய ஏற்றுமதிகள்மீது அறிவித்தார்.

ர‌ஷ்ய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரேன்மீதான அதன் தாக்குதலை இந்தியா மோசமாக்குவதாக அமெரிக்கா சாடியது.

வர்த்தகத் தடைகள் பற்றி இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக இம்மாதம் 10ஆம் தேதி திரு டிரம்ப் கூறினார்.

“அடுத்த சில வாரங்களில் எனது அன்பான நண்பர், திரு நரேந்திர மோடியிடம் பேசக் காத்திருக்கிறேன். இருநாடுகளுக்கும் உகந்த முடிவை எட்டுவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்று திரு டிரம்ப், தமது ட்ருத் சோ‌‌ஷல் தளத்தில் பதிவிட்டார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கும் இடையில் அளவில்லா வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாகத் திரு மோடி குறிப்பிட்டார். “இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள், இயல்பான பங்காளிகள்,” என்று எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்