புதுடெல்லி: காற்று மாசு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மத்தியில் ஆளும் பாஜக அரசைக் காங்கிரஸ் சாடியுள்ளது.
ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த காற்றுத் தரக் குறியீட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று 2024ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள், நகரங்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
138 நாடுகள் மற்றும் 8,954 நகரங்களின் காற்றுத் தரக் குறியீட்டுத் தரவுகளை அந்நிறுவனம் சேகரித்தது.
ஒட்டுமொத்தமாக 40,000க்கும் மேற்பட்ட காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து தரவுகளைப் பெற்று இப்பட்டியலை அந்நிறுவனம் தயாரித்தது.
காற்று மாசை அளவிடும் பிஎம் 2.5 நுண் துகளின் அடா்த்தி அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன. அதன்படி, காற்று மாசு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான சாட் முதலிடத்தில் உள்ளது.
அந்நாட்டில் காற்றுமாசு குறியீடு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 18 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பங்ளாதேஷ், பாகிஸ்தான், காங்கோ ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆளும் பாஜகவை சாடிய காங்கிரஸ்
இந்தியாவில் அதிகரித்துவரும் காற்றுமாசை சுட்டிக்காட்டி மத்திய அரசைக் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை அளவைவிட 10 மடங்கு அதிக காற்று மாசு இந்தியாவில் நிலவுகிறது. நாட்டில் காற்று மாசு சாா்ந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனுக்குப் புறம்பாக பாஜக அரசால் சுற்றுச்சூழல் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளும் அலட்சியமுமே காரணம்,” எனக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இழப்பீட்டுக்கான நிதியில் 75 விழுக்காடு அதாவது, ரூ.665.75 கோடியை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்தாமல் உள்ளது. இந்தச் செயலற்ற தன்மை, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது,” என்றார் அவர்.
“மக்கள் விரோதச் சுற்றுச்சூழல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தூய்மையான காற்றுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் சுதந்திரம் மீட்டெடுக்கப்பட வேண்டும்,” என்று திரு ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.
இதற்கிடையே, காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் உள்ளன. அந்நிறுவனத்தின் பட்டியலின்படி, இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைா்னிஹாட் நகரம் முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் புதுடெல்லியும் உள்ளன.