இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்பட இந்தியா, அமெரிக்கா இணக்கம்

இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்பட இந்தியா, அமெரிக்கா இணக்கம்

2 mins read
9181d107-db84-44fc-89ee-010fc34afbd4
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசினார். - படம்: பிடிஐ

புதுடெல்லி: அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், எரிசக்தி, தற்காப்புத் துறைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் இணக்கம் கண்டுள்ளன.

கனிமவளத்துறை தொடர்பான வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள திரு ஜெய்சங்கர் அங்கு சென்றுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்தது மகிழ்ச்சி என்றும் அவருடன் வட்டார, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா இடையே பொருளியல் உறவை வலுப்படுத்துவது குறித்தும் உத்திபூர்வ பங்காளித்துவம் குறித்தும் அமெரிக்காவுடன் விவாதித்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எட்டப்பட்டுள்ள முடிவை வரவேற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புதிய பொருளியல் வாய்ப்புகளை உருவாக்கவும் பகிரப்பட்ட எரிசக்தி பாதுகாப்பு இலக்குகளை அடைய ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

செயலாளர் ரூபியோ, அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குவாட் மூலம் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இதுதரப்பு நலன்களை மேம்படுத்த பல்வேறு துறைசார்ந்த ஆரம்ப ஆய்வுக் கூட்டங்களை நடத்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருதரப்பு நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முன்னேற, வளமான இந்தோ-பசிஃபிக் வட்டாரம் இன்றியமையாதது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

முக்கியமான கனிமங்கள் ஆய்வு, சுரங்கம், செயலாக்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை முறைப்படுத்துவது குறித்து திரு ரூபியோ, திரு ஜெய்சங்கர் ஆகியோர் விவாதித்ததாக அமெரிக்க முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்காவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் அமெரிக்காவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.

பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் நல்லுறவைப் பேணி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்