2.2 மில்லியன் டன் எரிவாயு ஒப்பந்தம் செய்த இந்தியா, அமெரிக்கா

2 mins read
6c7c99cf-bb4c-4855-8f5c-a38cd5963a56
பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் (இடது) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்காவிடமிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கான முக்கிய உடன்பாடு ஒன்றை இந்தியாவும் அமெரிக்காவும் செய்துகொண்டுள்ளன.

அதன் மூலம் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் ஏறக்குறைய 10 விழுக்காடு அமெரிக்காவிடமிருந்து தருவிக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாமீதான வரிகளை ஆகஸ்ட் மாதம் 50 விழுக்காட்டுக்கு உயர்த்தியதை அடுத்து இந்திய- அமெரிக்க உறவு கசந்தது.

ர‌ஷ்யாவின் எண்ணெய்யைத் தள்ளுபடி விலையில் வாங்குவதன் மூலம் உக்ரேன்மீதான போரை இந்தியா மேலும் தூண்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் குறைகூறினர்.

அதையடுத்து உத்தேச வர்த்தக உடன்பாட்டின் ஒரு பகுதியாக ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாகத் திரு டிரம்ப் கூறினார். ஆனால் புதுடெல்லி அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

வேளாண் வர்த்தகம், ர‌ஷ்யா எண்ணெய் இறக்குமதி போன்ற பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

இதற்கிடையே, பெட்ரோலிய, இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2.2 மில்லியன் டன் எடையுள்ள எல்பிஜி எரிவாயுவை வாங்குவதற்கான ஓராண்டு உடன்பாட்டை இந்தியா செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்தியச் சந்தைக்கான முதல் அமெரிக்க எல்பிஜி உடன்பாடு அது என்று திரு புரி வர்ணித்தார்.

உறுதியான, கட்டுபடியான எல்பிஜி எரிவாயுவை இந்திய மக்களுக்கு வழங்குவதற்காக வெவ்வேறு இடங்களிலிருந்து அதை இறக்குமதி செய்வதாகவும் திரு புரி குறிப்பிட்டார்.

உலகின் ஆகப் பெரிய, துரிதமாக வளரக்கூடிய எல்பிஜி சந்தை அமெரிக்காவுக்கு அதன் வாசலைத் திறந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

ர‌ஷ்யாவின் இரண்டு ஆகப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. அதையடுத்து இந்தியாவின் ஆதரவுபெற்ற ஹெச்பிசிஎல்- மிட்டல் எனெர்ஜி நிறுவனம் அக்டோபரில் ர‌ஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொண்டது.

ர‌ஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் அமெரிக்காவின் தடைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை மறுஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்