ரூ.33,660 கோடியில் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்த இந்தியா

ரூ.33,660 கோடியில் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்த இந்தியா

2 mins read
d402a3d5-495c-4438-83eb-16bbaf353776
இப்புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 15 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: தி எக்கானமிஸ்ட்

புதுடெல்லி: தொழில்துறை வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வரும் இந்தியா, தற்போது ரூ. 33,660 கோடியில் பாரத தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இத்தொகையைக் கொண்டு நாடு முழுவதும் 100 தொழில் பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது, நாட்டின் உற்பத்தித் திறனை ஊக்குவித்து உலகத் தரத்திலான தொழிலக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொழில் பூங்காக்களில் உட்புறச் சாலைகள், கீழ்த்தள வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவுநீர் கால்வாய், நீர் சுத்திகரிப்பு வசதிகள், சோதனைக் கூடங்கள், ஊழியர்களுக்கான வீடுகள் என அனைத்து வசதிகளும் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இத்தகைய ஏற்பாடுகள் மூலம் உடனடியாக தொழிலைத் தொடங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் கீழ், 100 முதல் 1,000 ஏக்கர் நிலப்பரப்பு வரையிலான தொழில் பூங்காக்களை மேம்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் என்றும் ஏக்கருக்கு ரூ.1 கோடி வீதம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இப்புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 15 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உற்பத்தி நிறுவனங்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் இத்திட்டம் நேரடிப் பலன்களை அளிக்கும் என்றும் திரு அஸ்வினி விளக்கினார்.

இதற்கு முன்பு, தனியார் பங்களிப்புடன் சீர்மிகு நகரங்கள் என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளது. அதேபோல் பாரத தொழில் மேம்பாட்டுத் திட்டமும் மாநில அரசுகள், தனியார் துறை பங்களிப்புடன் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்