புதுடெல்லி: இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் அவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர்க்கு அவை அளிக்கப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படும்.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அந்நாட்டு அதிபர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவ்விருதுகளை விருதாளர்களுக்கு அதிபர் திரவுபதி முர்மு வழங்குவார்.
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுவோர் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சு ஜனவரி 25ஆம் தேதி வெளியிட்டது.
5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 19 பேர் பெண்கள். 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 16 பேருக்கு மறைவுக்குபிந்தைய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
பத்ம விபூஷண் விருது
மறைந்த இந்தி நடிகர் தர்மேந்திரா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், வயலின் கலைஞர் என்.ராஜம், பி.நாராயணன், கேரள முன்னாள் முதல்வர் மறைந்த அச்சுதானந்தன் ஆகிய ஐந்து பேர் பத்ம விபூஷன் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர்.
பத்த பூஷண் விருது
பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, நடிகர் மம்முட்டி, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, பியூஷ் பாண்டே (மறைவு), எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், சதாவதனி ஆர்.கணேஷ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), தொழிலதிபர் உதய் கோட்டக், வி.கே.மல்ஹோத்ரா (மறைவு), வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பத்மஸ்ரீ விருது
தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் மாதவன், கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், கே.ராமசாமி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், புண்ணியமூர்த்தி நடேசன், ஆர்.கிருஷ்ணன் (மறைவு), ராஜாஸ்தபதி காளியப்ப கவுண்டர், எழுத்தாளர் சிவசங்கரி, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி ஆகிய 12 பேர் உட்பட 113 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காகப் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என இந்தியப் பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

