அமெரிக்கா, ரஷ்யாவை சமநிலையில் வைத்து அணுகும் இந்தியா

3 mins read
dfc459d6-3e2a-4931-820a-ffb5f07e5fc4
கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோ சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபரைக் கட்டியணைத்து, ‘என் நண்பர்’ என்றார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுடனான உறவுகள் புதிய நிலையை, வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என ரஷ்ய அதிபர் புட்டின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீதான படையெடுப்புக்குப் பின்னர், முதன் முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார் புட்டின்.

இந்தியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவுடனான தனது உறவுகளை ரஷ்யா வலுப்படுத்த அதிபர் புட்டினின் பயணம் நல்லதொரு வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

தற்காப்பு, எரிசக்தி தொடர்பான உறவுகளை ரஷ்யாவும் இந்தியாவும் வலுப்படுத்தி வருகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் வகையில் புட்டினின் பயணம் அமையும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவும் இந்தியாவும் நீண்ட கால கூட்டாளிகள் என்றுதான் வரலாறு இதுவரை பதிவு செய்துள்ளது. மேற்கத்திய நாடுகளைக் கடந்து, புதுடெல்லிக்கும் மாஸ்கோவுக்கும் இடையே நிலவும் வலுவான உறவுகளை வெளிப்படுத்துவதில் ரஷ்ய அதிபர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

அதே சமயம், இந்தியாவைப் பொருத்தவரை ரஷ்யாவுடனான உறவு என்பது சோவியத் யூனியன் காலத்தில் தொடங்கி அணுக்கமாக நீடித்து வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா தடுக்கிறது. இந்த எண்ணெய் விவகாரம் ரஷ்யா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே மிக முக்கியமானது. இத்தகைய சூழலில் ரஷ்ய அதிபர் இந்தியப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி எப்போதும் சுயாதீனமான புவிசார் நிலைப்பாட்டைத்தான் எடுத்துச் செயல்படுவார் என்பதை மீண்டும் நிரூபிக்க நல்லதோர் வாய்ப்பு அமைந்துள்ளதாக அனைத்துலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யாவை சமநிலையில் வைத்து அணுகும் உக்தியை இந்தியா கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்கா வெகுவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சீனாவுடனான இந்திய அறவுகள் மோசமாக உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, ரஷ்யா அல்லது ஜப்பான், ஐக்கிய அரபு சிற்றரசு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவுக்கான வரியை 50% கூடுதலாக விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதுடன், அமெரிக்காவிடம் இருந்து அதிகமான ஆயுதங்களை வாங்க வேண்டும் என்றும் இந்தியாவுக்கு நெருக்கடி தரப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டைக் காண பிரதமர் மோடியின் அரசாங்கம் தொடர் பேச்சுகளை நடத்தி வருகிறது.

மேலும், ரஷ்யாவுடனான இந்திய உறவு நெருக்கமாக இருப்பதை திரு மோடி அரசாங்கம் உறுதி செய்கிறது. அதனால்தான் உக்ரேன் - ரஷ்யா மோதல் விவகாரத்திலும்கூட சண்டையை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கும் இந்தியா, மாஸ்கோவுடனான தனது உறவு பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. அதனால்தான் கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோ சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு ரஷ்ய அதிபரைக் கட்டியணைத்து, ‘என் நண்பர்’ என்றார்.

கீவ் நகரில் உள்ள சிறார்களுக்கான மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதற்கான அடுத்த நாள், திரு மோடியை மாஸ்கோவில் காண முடிந்தது.

இப்படி அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளையும் ஒருசேர எதிர்கொண்டு சமநிலை அரசியல் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கப் பார்க்கிறது இந்தியா என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.

குறிப்புச் சொற்கள்