பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டில் இருக்கும் இந்திய மாணவர்கள் தங்குமிடங்களைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான், பங்ளாதேஷ், இந்தியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து கிர்கிஸ்தானுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிருப்தியடைந்த உள்ளூர்வாசிகள் வெள்ளிக்கிழமை (மே 17) போராட்டங்களில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், “கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்பில் உள்ளோம். இப்போது அமைதியான சூழல் நிலவுகிறது. ஆயினும், தங்குமிடங்களைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம்,” என்று ‘எக்ஸ்’ ஊடகம் வழியாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கிர்கிஸ்தானிலுள்ள இந்திய மாணவர்கள் அங்குள்ள தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் அறிவுறுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட 15,000 இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானில் படித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 13ஆம் தேதி, தங்குவிடுதி ஒன்றில் உள்ளூர் மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் மூண்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மோதலில் பங்கேற்ற வெளிநாட்டு மாணவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வெள்ளிக்கிழமையன்று உள்ளூர்வாசிகள் ஒன்றுகூடி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஆயினும், போக்கிரித்தனத்துடன் நடந்துகொண்டதாகக் கூறி, வெளிநாட்டு மாணவர்கள் மூவரைக் கைதுசெய்துள்ளதாகக் காவல்துறை கூறியது. மேலும், அம்மூவரும் சண்டைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் காணொளிமூலம் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை சொன்னது.
நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் தலைநகர் பிஷ்கெக்கில் கலவரத் தடுப்புக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கிர்கிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கிர்கிஸ்தானில் இருக்கும் தன் நாட்டு மாணவர்கள் வெளியே செல்லவேண்டாம் என்று பாகிஸ்தானும் அறிவுறுத்தி இருக்கிறது.

