புதுடெல்லி: பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
அதற்கான அதிகாரபூர்வ இணையத்தளம், ‘லோகோ’ எனப்படும் இலச்சின், கருப்பொருள் ஆகியவை புதுடெல்லியில் ஜனவரி 13ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
அவற்றை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிமுகப்படுத்தினார்.
2024ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டன.
கடந்த ஆண்டு இந்தோனீசியாவும் இதில் இணைந்தது.
கடந்த ஆண்டு ‘பிரிக்ஸ்’ உச்சநிலை மாநாடு பிரேசிலில் நடந்த நிலையில், இவ்வாண்டுக்கானத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
தாமரை வடிவிலான இலச்சினில், கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தேசியக் கொடிகளில் உள்ள நிறங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்கும் வடிவமும் அந்த இலச்சினின் நடுவில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் தலைமையின்கீழ் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாடு, கூட்டங்கள் தொடர்பான விவரங்கள் அந்தப் புதிய இணையத்தளத்தில் வழங்கப்படும் என அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மேலும், கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒற்றுமை, சமமான பிரதிநிதித்துவத்தை வெளிக்காட்டும் வகையில் இலச்சினில் அனைத்து உறுப்பு நாடுகளின் தேசியக்கொடி வண்ணங்களும் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு இந்தியா தலைமை பொறுப்பில் இருக்கும்போது முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறிய திரு ஜெய்சங்கர், உலகளவில், வட்டாரச் சவால்களை எதிர்கொள்வதில் இந்தக் கொள்கைகளே ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் முன்னுரிமைகளாக இருக்கும் என்றார்.

